Sunday, 27 November 2016

Ulutham kanji for good life

Read the comments for how to prepare. Thanks.

இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை.
சிறுவயது முதலே என் ஆச்சியின் கட்டுப்பாட்டில் வளர்ந்ததால் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு எங்கள் வீட்டில்.உளுந்தங்கஞ்சி,உளுந்தங்களி இரண்டுமே வாரத்திற்கு இரண்டுமுறை உண்டு.

சுங்காத(சுருங்காத) தோலும்,மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிடு என்பாள் ஆச்சி.அழகும் ஆரோக்கியமும் முக்கியம் என்று அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருப்பாள்.என்னுடைய உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.இதன் செய்முறையை பல பேர் கேட்டுக் கொண்டே இருந்ததனால் இந்தப் பதிவு.

இதன் பலன்கள்:
முக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

உளுந்தங்கஞ்சி

தேவையான பொருட்கள் :
உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)
பச்சரிசி அரை டம்ளர்
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
பூண்டு 20 பல்லு
வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்
தேங்காய் ஒரு மூடி

செய்முறை: உளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.( குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம்.மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.)

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு,தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.
(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்,.
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)

-Arulmozhi Chelliah
https://www.facebook.com/groups/info.thagaval

..

No comments:

Post a Comment